ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என விவசாயிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடைமுறை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (27/05/2019) முதல் குறைத்தீர்வு கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் கோரிக்கை மனுக்களை விவசாயிகள் ஒன்றிணைந்து வந்து மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் வழங்கினர்.
அதில், "விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும், இதே போல் கஜா புயல் காரணமாக விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்களை வட்டியுடன் செலுத்த வங்கிகள் தங்களை நிர்பந்திப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். தற்போது விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ள நிலையில் விவசாயிகள் வாங்கிய கடனுக்கு குறைந்த பட்சமாக வட்டியை மட்டுமாவது தள்ளுபடி செய்ய வேண்டும்," என்று கூறி மனு அளித்தனர்.