திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில், டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள காவிரி விடுதியில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது பாஜகவின் மாணவர் அமைப்பினரான ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 60 மாணவ மாணவிகள் காயம் அடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைக் கண்டித்து பல்வேறு இடங்களில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே மத்திய பல்கலைக்கழகமான திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் திடீரென கையில் தீப்பந்தத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் ஏபிவிபி அமைப்பிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடியே பல்கலைக்கழக வாசல் நோக்கி பேரணியாக சென்றனர். தொடர்ந்து மத்திய பல்கலைக்கழக வாசலில் ஜே.என்.யூ. மாணவர்களை தாக்கியவர்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திடீரென நள்ளிரவில் தீப்பந்தத்துடன் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பல்கலைக்கழக பகுதி மட்டுமின்றி, சுற்றியுள்ள பகுதிகளிலும் பரபரப்பு ஏற்பட்டது.