திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்களிடையே ஏற்பட்ட மோதலில் செவிலியர் ஒருவரை சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை உண்டாக்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருக்களம்பூர் கிராமத்தைச்சேர்ந்த மகாதேவன் 35. இவரது மனைவி கவிதா 29 க்கு குடவாசல் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 24 ம் தேதி பிரசவம் நடைபெற்றது. அவரது உடம்பில் இரத்தம் குறைவாக உள்ளது என்று கூறி மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனையடுத்து கவிதாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 1ஆம் தேதி கவிதா உயிரிழந்தார். இதனையடுத்து 2 ஆம் தேதி விசாரனை நடத்திய மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார் பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி செவிலியர்கள் விஜயகுமாரி, பாரதி, வித்யா மற்றும் உதவியாளர்கள் ரவிக்குமார் சுந்தர்ராஜன் ஆகிய ஐந்து பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதோடு டாக்டர் லெனின் மீதும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் செவிலியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்ததைக்கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து செவிலியர் சங்கத்தை சேர்ந்த வித்யா மற்றும் உதவியாளர்கள் ரவிக்குமார் சுந்தரராஜன் ஆகிய ஐந்து செவிலியர்கள், சங்கத்தினர் தலைமையில் இன்று மருத்துவ கல்லூரி கருத்தரங்க கூட்ட அரங்கில் ஒன்றுகூடி பேசியுள்ளனர். அப்போது ஏற்கனவே அரசு ஒப்பந்த செவிலியர் சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வந்த செவிலியர் வசந்தி என்பவர் திருவாரூர் மருத்துவமனையில் தற்போது பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஒப்பந்த பணியாளர் சங்கம் சார்பில் பேசியிருக்கிறார்.
நிரந்தர பணியாளரான வசந்தி எப்படி ஒப்பந்த பணியாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்துவது குறித்து பேசலாம் என்று கூறி மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கூட்டத்தில் ஒருவருக்கொருவர் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருவாரூர் மருத்துவமனையிலேயே ஆண் செவிலியராக பணியாற்றி வரும் வசந்தியின் கணவர்
சிந்தன்( 31) என்பவருக்கும் மற்றொரு ஆண் செவிலியரான சக்திவேல் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதனை வசந்தி தடுக்க சென்றுள்ளார். ஆத்திரமடைந்த சக்திவேல் மற்றும் பாஸ்கர், இளவரசன் ஆகியோர் சேர்ந்து வசந்தியை சரமாரியாக தாக்கினர். தலையில் பலத்த காயத்தோடு தறையில் விழுந்தவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
பொதுமக்களை கவனிக்க வேண்டிய புனிதமான தொழிலில் இருக்கும் செவிலியர்கள், சங்கம் என்கிற பெயரில் அடிதடியில் இறங்கியிருப்பது பொதுமக்களை சங்கடப்படவே செய்துள்ளது.