கோடை விடுமுறை என்பதால் திருநள்ளார் கோவிலில் வழக்கமானதை விட பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் வந்துபோவது வர்த்தகர்களையும், கோவில் நிர்வாகத்தினரையும் நெகிழவைத்துள்ளது.
காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாரில் ஸ்ரீ தர்ப்பனீஷ்வரர் கோவிலில் சனீஸ்வரனை தரிசிக்க சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதே போல் கோடை விடுமுறை காலத்திலும் பக்தர்களின் வருகை அதிகமாக காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடைகாலத்தின் துவக்கத்தில் தேர்தல் வந்ததால் பக்கத்தர்களின் வருகை வெகுவாக குறைந்துபோனது.
இந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்பதை உணர்ந்த கோவில் நிர்வாகம், பல்வேறு அடிப்படை வசதிகளை முன்கூட்டியே செய்யப்பட்டது. இக்கோயிலின் தனி அதிகாரியான காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கோவிலில் ஆய்வுசெய்து, எளிய முறையில் தரிசனம் செய்யவும், நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கவும், வழக்கமான அன்னதானத்தைவிட கூடுதலாக வழங்கவும், கோவிலில் மூலவர் சன்னதிக்கு செல்வோர் சிரமமின்றி செல்லவும், கூடுதல் மின் விசிறிகள், குளிர்சாதனம் உள்ளிட்ட சிறப்பு வசதிகளை ஏற்படுத்துமாறும் கோயில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினார். இதன்படி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருக்கிறது.
இதன்மூலம் தினசரி காலை 9 மணி முதல் நளன் குளத்தில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு புதுச்சேரி போலீசாரும், கோயில் ஊழியர்களும் பக்தர்களை முறைப்படுத்தி அனுப்பிவருகின்றனர். வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. ராஜகோபுரம் வழியாக வெளியேறும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினசரி பகல் 12 மணி வரை கூட்டம் ஏறக்குறைய 50 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ய வருகிறார்கள் எனவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து, திருநள்ளார் வர்த்தகர்கள் கூறுகையில், “எப்போதுமே கோடைகாலத்தில் பக்தர்களை தாண்டி, சுற்றுலாவாகவருபவர்களும் அதிகமாக இருக்கும், இந்தவருட ஆரம்பத்தில் கூட்டம் இல்லாமல் போனதால், எங்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஆகிடுச்சி, இதை நம்பி கூடுதலாக வட்டிக்கு கடன் வாங்கி, கூடுதலா பொருள் வாங்கிபோட்டிருக்கிறோம், ஆரம்பத்தில் கூட்டம் இல்லாமல் போனதும் வருத்தமடைந்தோம். பிறகு கூட்டம் வரத்துவங்கியதுமே ஆறுதலாக இருக்கிறது." என்கிறார்கள்.
அங்குவந்திருந்த பக்தர்கள் கூறுகையில், “மூலவரை தரிசனம் செய்துவிட்டு சனீஸ்வர பகவானை தரிசிக்க வரும் வகையில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதால். கோயிலுக்கு வயதானவர்கள் படிகளில் ஏறி இறங்க சிரமப்படும் நிலமையாகுது. அதோடு கூட்டமும் தேங்குகிறது. எனவே இப்பிரச்சினையில் கோயில் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்." என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.