Skip to main content

“ஆம்ஸ்ட்ராங்கிற்காக ஆங்காங்கே பகை எழுந்து இருக்கிறது” - தொல்.திருமாவளவன்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Thirumavalavan said that Animosity is brewing here and there for Armstrong

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இதனிடையே, இந்தக் கொலை வழக்கில், நேற்று இரவே, பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேர் தாங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம் என்று காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் கடந்த ஆண்டு வெட்டி கொல்லப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா என்பவர் தனது அண்ணன் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே, கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக  பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளன் எம்.பி., “பகுஜன் சமாஜ் கட்சி அலுவலக வளாகத்திற்குள் அவரது உடல் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதனை அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சரணடைந்து இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

சரண் அடைந்தவர்களை  கைது செய்து விட்டோம் என்ற அடிப்படையில் புலன் விசாரணை நிறுத்தி விடக்கூடாது. உண்மையான குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். பொதுமக்களுக்கான பிரச்சனையில் தலையிடுபவர் அதற்காக அவருக்காக ஆங்காங்கே பகை எழுந்து இருக்கிறது. அதற்குரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் வழங்கவில்லை அது அதிர்ச்சி அழிக்கிறது.

தமிழ்நாட்டில் பட்டியலின இளைஞர்கள் குறிப்பாக தமிழக தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கிறது. இன்று ஒரு அரசியல் தலைவர் அவரது இல்லத்தின் அருகிலேயே கொல்லப்பட்டிருக்கிறார். இது காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால். கூலிப்படைகளை சாதியவாதி கும்பலை கொலைகார கும்பலை அடையாளம் கண்டு அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அரசுக்கு மேலும் இதனால் களங்கம் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்