Skip to main content

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி! திமுகவின் முன்மொழிவை விசிக வழிமொழிகிறது!

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
t


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை: ‘2019 பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக திரு.ராகுல்காந்தியை முன்மொழிகிறேன்’ என்று திமுக தலைவர் தளபதி முக.ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்திருப்பது  வரலாற்றுச் சிறப்புக்குரிய ஒன்றாகும். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழிமொழிந்து, வாழ்த்தி வரவேற்கிறோம். சனாதன சக்திகளை வீழ்த்தி  திரு.ராகுல்காந்தி அவர்கள் பிரதமராக்குவதற்கு பாடாற்றுவோம் என உறுதியேற்கிறோம்.


’சமத்துவப் பெரியார்’ கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற திருமதி.சோனியாகாந்தி அம்மையார், திரு.ராகுல்காந்தி, ஆந்திரா, கேரளா, புதுவை ஆகிய மூன்று மாநில முதலமைச்சர்கள் மற்றும் தோழமை கட்சித் தலைவர்களின் முன்னிலையில் திமுக தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டது பொருத்தமானதாகும். காங்கிரஸ் தலைவராக திரு.ராகுல்காந்தி பொறுப்பேற்று ஓராண்டு முடிந்த நிலையில் அவருடைய பணிகளைப் பாராட்டி பரிசளிப்பது போல் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.


பிரதமர் நரேந்திரமோடியின் போலி வாக்குறுதிகளையும், பொய் புரட்டுகளையும் அம்பலப்படுத்தி பாஜகவின் சனாதனம் என்னும் சாதி-மதவெறி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மூன்று மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது திரு.ராகுல்காந்தி அவர்களின் சாதனையாகும். 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என கூச்சல் போட்டவர்களின் கொட்டத்தை அடக்கி, சனாதனம் இல்லாத இந்தியா, ஜனநாயக இந்தியா, சமயச் சார்பற்ற இந்தியா என்ற கருத்தாக்கத்தை வலுப்படுத்தியிருப்பவர் ராகுல்காந்தி ஆவார். அவர் மதச்சார்பற்ற சக்திகளின் அணியை தலைமையேற்று வழிநடத்தத் தகுதியானவர் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப்  பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் தீர்மானிக்கக் கூடிய ஆற்றல் மிக்க கட்சியாகத் திகழும் திமுக, இன்று ராகுல்காந்தி அவர்களைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருப்பது நாளைய வெற்றிக்கான முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.

 

இந்தியாவெங்கும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி வரும் ராகுல்காந்தி அவர்களையும், அவருக்கு உற்றத் துணையாக தமிழகத்தில் மதச்சார்பற்ற கட்சிகளின் அணியை தலைமையேற்று வழிநடத்தும் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களையும் உளமாரப் பாராட்டுகிறோம். ’’

 

சார்ந்த செய்திகள்