திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 1,845 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 899 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும் 266 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்றார். இதனைத் தொடர்ந்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர்கள் வழங்கினார்.
அதோடு கரோனா தடுப்பூசி முகாம்மையும் தொடங்கி வைத்தனர். அதன் பின் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ''திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளில் நடைபெற்று வரும் பணிகளில் ஏதேனும் முறைகேடுகள் இருப்பதாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தற்பொழுது தமிழகத்தில் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது. நாங்கள் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம், சொல்லாததையும் செய்யக்கூடிய அரசாக இந்த அரசு இருந்து வருகிறது'' என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாவட்ட கலெக்டர் விசாகன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.