
தனியார் நிறுவன மேலாளரை அடித்துக்கொலை செய்து 22 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்று உள்ளனர்.
தேனி பங்களாமேடு பென்னி குவிக் நகரைச் சேர்ந்த அழகர்சாமியின் மகன் அருண்குமார். இவர் தேனி நகர் மதுரை சாலையில் சன்னாசி என்பவருக்கு சொந்தமான மோட்டார் விற்பனை நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று பகலில் இவர் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் எடுத்துவரச் சென்றார். அதன்படி தேனி பெத்தாச்சி விநாயகர் கோவில் அருகில் உள்ள ஒரு வங்கியில் 22 லட்சத்தை எடுத்தார். அருண்குமார் வழக்கமாக வங்கியில் பணத்தை எடுத்து விட்டு அதன் நிறுவனத்தில் வைப்பது அல்லது நிறுவனம் உரிமையாளரின் வீட்டில் பணத்தை கொடுப்பது வழக்கம். ஆனால் அவர் நேற்று வங்கியில் எடுத்த பணத்தை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொடுக்கவில்லை. நிறுவனத்திற்குச் சென்ற நிலையில் அங்கும் பணத்தைக் கொடுக்காமல் வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நிறுவனத்தில் வேலை பார்க்கும் மற்றவர்கள் இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அருண்குமார் செல்போன் எண்ணில் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவருடைய செல்போன் எண் பெரியகுளம் சாலை வழியாக அண்ணாச்சி விளக்கு சென்று பின்னர் புதிய பஸ் நிலையம் ஒரு வழி புறவழிச் சாலையில் தனியார் உள் விளையாட்டு அரங்கு அருகில் மலைக்கு அடிவாரத்தில் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் அங்கு சென்றார். அப்போது மலைக்கு அடிவாரத்தில் அருண் குமார் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பின் அருண்குமார் பிணம் அருகே ரத்தக்கரை படிந்த ஒரு கத்தியும் செல்போன் ஆகியவையும் கிடந்தது. அதோடு அவருடைய மோட்டார் சைக்கிள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சாவியும் மோட்டார் சைக்கிளிலேயே இருந்தது. அவருடைய பின்தலை மற்றும் முகத்தில் கத்தியால் தாக்கப்பட்டு பலத்த காயம் இருந்தது. பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தேனி போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அவர்கள் அருண் குமார் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாய்சரண் சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மோட்டார் சைக்கிள் சுத்தியல் ஆகியவற்றின் பதிவாகி இருந்த கைரேகைகளைச் சேகரித்தனர் சம்பவ இடத்தில் இருந்த காலி மதுபான பாட்டில்கள் பதிவாகி இருந்த கைரேகைகளைச் சேகரித்தனர். பின்னர் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட அருண்குமார் வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்ததை நோட்டமிட்ட மர்ம கும்பல் அதன் பிறகு அவரைப் பின்தொடர்ந்து சென்று கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
இது சம்பந்தமாக போலீசார் சிலரிடம் கேட்டபோது, கொலை செய்யப்பட்ட அருண்குமார் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து விட்டார். பின்னர் இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவர் ஏன் இங்கு வந்தார் என்று தெரியவில்லை. அவருக்கு நன்கு அறிமுகமான நபர்கள் தான் அவரை இங்கு அழைத்து வந்து இருக்கக்கூடும். பணத்தைக் கொள்ளையடிக்க இச்சம்பவம் நடந்து இருக்கலாம். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று கூறினார்கள். இச்சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளைப் பிடிக்க அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.