மதுபாட்டில் விற்க அனுமதி கோரி சாலையில் பிணம் போல் படுத்து கண்பார்வையற்ற முதியவர் மறியலில் ஈடுபட்டார். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் இருக்கும் வருசநாடு. இந்த வருஷ நாட்டுக்கு அருகே உள்ள தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மந்தி ராஜா. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இவர் கண்பார்வை இழந்தார். இதனால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. எனவே வருமானத்துக்காக டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அதனை கூடுதலாக குடிமகன்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கினார்.
இந்த விஷயம் வருஷநாடு போலீசார் காதுக்கு எட்டவே மந்தி ராஜாவிடம் மதுபாட்டில்களை கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்யக்கூடாது என பலமுறை எச்சரிக்கை செய்து இருந்தனர். மேலும் அவரிடம் இருந்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து இருந்தனர் அதைத் தொடர்ந்து போலீசாரும் மந்தி ராஜாவை கண்காணித்து வந்ததால், கடந்த சில நாட்களாக மந்தி ராஜாவால் குடிமகன்களுக்கு மறைமுகமாக மது பாட்டில்களை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் மனம் நொந்துபோன மந்தி ராஜா மது பாட்டில் விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி கழுத்தில் மாலை அணிந்து பிணம் போல் வருஷநாடு சாலையில் மந்திர ராஜா படுத்து சாலை மறியலில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உடனே சப் இன்ஸ்பெக்டர் ராம் பாண்டியன் தலைமையிலான போலீசார் உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்து சாலையில் பிணம் போல் படுத்து மறியலில் ஈடுபட்டிருந்த கண்பார்வையற்ற முதியவரான மந்தி ராஜாவை சமாதானப்படுத்தி வருஷநாட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதன்பின் மந்தி ராஜாவின் உறவினர்களை உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்து, அவர்களை எச்சரித்து அதன்பின் மந்தி ராஜாவை அவர்களுடன் அனுப்பி வைத்தனர். கண்பார்வை இழந்து வருமானம் இல்லாமல் சிரமப்பட்டு வரும் முதியவர் மந்திரா ராஜாவுக்கு அரசு சார்பில் உதவிகளை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்களும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதோடு இச்சம்பவம் வருஷநாடு மட்டுமல்லாமல் தேனி மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.