Skip to main content

தேனி: கரோனா சிகிச்சை மையத்தில் ஐ.டி. பொறியாளர் தற்கொலை முயற்சி!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

IT engineer attempts suicide!

 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மையத்தில் இருந்த ஐ.டி. பொறியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, கல்லூரி, பள்ளிகளில் சிகிச்சை முகாம் அமைத்துள்ளது மாவட்ட நிர்வாகம். அந்த வகையில் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 85 நபர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

 

இந்நிலையில் இன்று காலை சிகிச்சையில் இருந்த ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் பொறியாளர், இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இடது காலில் படுகாயம் அடைந்த அந்த நபரை உடனடியாக மீட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முதலுதவி அளித்தனர். அப்போது அவரது கை மற்றும் கழுத்தில் கத்தியால் கிழிக்கப்பட்ட காயம் இருந்துள்ளது. அவருக்குத் தேவையான முதலுதவி அளித்து விட்டு காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் 39 வயதுடைய அந்த நபர், தேனி மாவட்டம் கோம்பையில் உள்ள மனைவி மற்றும் சமீபத்தில் பிறந்த தனது பெண் குழந்தையைப் பார்க்க 10 நாட்களுக்கு முன்னர் கோம்பை வந்துள்ளார்.

 

அப்போது, அவரை கரோனா பரிசோதனைக்கு சுகாதாரத்துறையினர் உட்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி உத்தமபாளையம் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்படுள்ளார். இந்நிலையில் அவரது மனைவிக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கும் கரோனா தொற்று உறுதியாகி கைக்குழந்தையுடன் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

 

இத்தகவலை அறிந்த ஐ.டி பொறியாளர், தனது மனைவி மற்றும் குழந்தையைப் பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கூறியுள்ளார். இந்நிலையில், மனைவி மற்றும் குழந்தையக் காண முடியாத மன அழுத்தம் காரணமாக, இன்று காலை கத்தியால் தனது கழுத்து மற்றும், கைகளில் கிழித்துக்கொண்டு, இரண்டாவது மாடியில் இருந்து கிழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. 

 

http://onelink.to/nknapp

 

இதுசம்பந்தமாக போலீசார் சிலரிடம் கேட்டபோது, மனைவி குழந்தையைப் பார்க்க முடியாத மன அழுத்தத்தில்தான் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அவருடன் சிகிச்சையில் இருக்கும் நண்பர்களிடமும் தெரிவித்திருக்கிறார். இடது காலில் முறிவு ஏற்பட்டிருக்கிறது. கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றனர். இச்சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்