Skip to main content

இந்திய அளவில் டிரண்டாகும் கலைஞர் ஹேஷ்டேக்!

Published on 07/08/2018 | Edited on 07/08/2018
 


திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று மருத்துவ அறிக்கை வெளியான நிலையில், கருணாநிதி, காவேரி மருத்துவமனை ஹேஷ்டேக்குள் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27ம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் அவர் உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கலைஞரின் உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கடைசியாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே கடந்த 5ஆம் தேதி கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை தந்தார். அப்போது, அவர் கலைஞரை நேரில் சந்திப்பார் என்றும் துணை குடியரசுத்தலைவர் வெங்கைய்யா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மருத்துவமனை வந்த போது அவர்கள் கலைஞரை தீவிர சிகிச்சை பிரிவில் சந்திக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையின் போதும் அதே எதிர்பார்ப்போடு தொண்டர்கள் காத்திருந்தனர்.

குடியரசுத் தலைவரும் தான் மருத்துவமனையை விட்டு புறப்பட்ட சில மணி நேரத்தில் அவர் கலைஞரை நேரில் சந்தித்தாக தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் கலைஞரை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகவில்லை. மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் நலம் விசாரிப்பது போன்ற புகைப்படங்கள் தான் வெளியிடப்பட்டது. அதேபோல், கலைஞர் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையும் வெளியாகவில்லை. இதனால் தொண்டர்கள் மத்தியில் ஒரு பதட்ட சூழ்நிலை உருவானது.

இந்நிலையில், திங்கட்கிழமையான நேற்று காலை முதலே கலைஞர் உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. காவேரி மருத்துவமனை சுற்றுவட்டாரம் சற்று பதற்றமாகவே இருந்தது. ஸ்டாலின், அழகிரி இருவரும் மருத்துவமனைக்கு வந்தனர். பிற்பகல் நேரத்தில் தயாளு அம்மாள் முதல் முறையாக மருத்துவமனை வருகை தந்தார். இத்தனை நாட்களில் கலைஞரைப் பார்க்க நேரில் வராத தயாளு அம்மாள் மருத்துவமனைக்கு வந்தது மேலும் பதட்டத்தை உருவாக்கியது.

இதனால், காவேரி மருத்துவமனைக்கு தொண்டர்கள் படையெடுக்க தொடங்கினர். இந்நிலையில் நேற்று மாலை சரியாக 6.30 அளவில் காவேரி மருத்துவமைனயின் அறிக்கை வெளியானது. அதில், கலைஞரின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளைப் பராமரிப்பது ஒரு சவாலாக இருக்கிறது. இதற்கு அவரது வயது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில், கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைப்பதன் அடிப்படையிலேயே அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என கூறப்பட்டிருந்தது.

இதனால், தொண்டர்கள் மத்தியிலும் பிற கட்சி தலைவர்கள் மத்தியிலும் மட்டுமன்றி தமிழகம் முழுவதும் ஒரு பதற்றம் பற்றியது. இதையடுத்து, காவேரி மருத்துவமனை இருக்கும் ராயப்பேட்டை பகுதிக்கு வரும் திமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வருகிறது. அத்துடன் இரவு பகலாக திமுக தொண்டர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே ட்விட்டரிலும் கருணாநிதி ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் காவேரி ஹாஸ்பிட்டல் ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்