
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், மிட்டாளம் ஊராட்சிக்கு உட்பட்டது ஊட்டல் தேவஸ்தானம் கிராமம். காப்புகாட்டுப் பகுதியில் சரஸ்வதி ஆலயம் உள்ளது. இங்கு கன்னிக்கோயில், ராதை விஷ்ணு ருக்மணி கோயில், சிவன் கோவில்கள் என தனித்தனியே உள்ளன. இந்த சன்னதிகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து, அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் இருந்து பணம் மற்றும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சாமி அலங்கார பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இரண்டு இளைஞர்கள் சென்று கதவை உடைப்பது, உண்டியல்களில் இருந்து பணம் மற்றும் பொருட்களை எடுப்பது ஆகியவை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அந்தக் கேமராக்களை தாமதமாக கண்ட அந்த இளைஞர்கள், பின்னர் கேமராக்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
பிப்ரவரி 3ஆம் தேதி காலை கோயில் நடைதிறக்க பூசாரி சென்றபோது, கதவு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகி நிர்வாகிகளுக்கு தகவல் தந்துள்ளார். அவர்கள் வந்து பார்த்துவிட்டு சம்பவம் குறித்து உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்ததனர்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி அதில் பதிவான உருவங்களை வைத்து கொள்ளைக் கும்பலைத் தேடி வருகின்றனர்.