சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகே திமுக தலைவர் கலைஞரின் உடல் அடக்கம் செய்வதற்கான பணிகள் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் துரிதமாக நடைப்பெற்றது. ராஜாஜி ஹாலில் திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டபின், மாலை 4 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஊர்வலத்தில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்பட நிர்வாகிகள் பலர் நடந்தே வந்தனர். கலைஞர் வாழ்க... தலைவா வாழ்க... உள்ளிட்ட தொண்டர்களின் முழக்கங்கள் விண்ணை பிளந்தன.
மு.க.அழகிரி, ராஜாத்தியம்மாள் மற்றும் கலைஞரின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு முன்னதாக சென்றனர்.
இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கத்தை அடைந்ததும், குடும்பத்தினர் மற்றும் தலைவர்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு, கலைஞரின் உடல் அண்ணா நினைவிடத்தற்கு பின்புறம் அடக்கம் செய்யப்படும்.