தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செருவாவிடுதி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணிகளின் சிறப்பால் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆனாது. இங்கு பொது மருத்துவம், சித்த மருத்துவப் பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, பல் சிகிச்சை, குழந்தைகள் பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளன. நவீன ஸ்கேனர் வசதிகள், அறுவை அரங்கம், என தனியார் மருத்துவமனைகளைப் போல சுத்தம், சுகாதாரத்துடன் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் இயங்கி வருகிறது. வண்ண வண்ண கட்டிடங்கள். சுவர்களில் விழிப்புணர்வு விளம்பர சித்திரங்கள், குழந்தைகளுக்காக சிறுவர் பூங்கா, இப்படி அத்தனை வசதிகளும் உள்ளது. மருத்தவர்கள் அறை, செவிலியர்கள் அறை, மருந்துகள் வைப்பறை என்பதுடன் இருப்பு உள்ள மருந்துகளின் விபரங்களம் பெயர் பலகையில் வைக்கப்பட்டுள்ளது.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினரின் கனிவான கவணிப்பால் முகம் சுளிக்காமல் வந்து செல்லும் நோயாளிகளுக்கு விரைவில் குணமடைகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஐஎஸ்ஓ உலகத் தரச்சான்றிதழ் இம்மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்காக தனி கவணிப்புகள். அவர்களின் நலனில் அக்கரை கொண்டு முதல் முதலில் கர்ப்பணிகளுக்காக வளைகாப்பு திருவிழா நடத்தியது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான்.
அதே போல சுகாதார நிலைய வளாகத்தில் மூலிகைத் தோட்டம், இயற்கை முறையில் நச்சுக் கலப்பில்லாத காய்கறிகளை பயிரிட்டு கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு கொடுப்பதுடன் அவர்கள் வீட்டிலும் சாப்பிட காய்கனிகளை வழங்கி வருகின்றனர். தொடர்ந்து நோயாளிகளுக்கு நாட்டுக்கோழி முட்டை, பசுமாடு சுகாதார நிலைய வளாகத்திலேயே வளர்த்து, சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி பெண்களுக்கு வீடு தேடிச் சென்று பால், முட்டை, நாட்டு வெல்லம், இயற்கை காய்கறிகள் வழங்குதல் என சிறப்பான கவணிப்புகளும் உண்டு. இந்த பணிகளுக்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் பாராட்டு பெற்றது இம்மருத்துவமனை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்டு, நன்கொடையாளர்கள் உதவியாலும், மருத்துவ அலுவலர்களின் சொந்த முயற்சியாலும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளது.
இந்நிலையில் தான் மத்திய அரசின் தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான முயற்சிகளை மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் மேற்கொண்டு வந்தார். இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய அதிகாரிகள் குழு (அக்.23, 24) புதன், வியாழக்கிழமை ஆகிய இரு நாட்கள் வருகை தந்து செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தனர். தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ் இங்கு வழங்கப்படும் சுகாதார சேவைகள், பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வுகள் செய்ததுடன் நோயாளிகளிடமும் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
மத்திய ஆய்வுக்குழுவில் டாக்டர் ஐ.கே.கோகர், சுனில் குமார் சர்மா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அவர்களுடன் தஞ்சை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ரவீந்திரன், தொற்றாநோய் மாவட்ட திட்ட அலுவலர் டாக்டர் வினோத் குமார், மாவட்ட பயிற்சி அலுவலர் டாக்டர் தீபக், மருத்துவ அலுவலர் பிரதீப் ராஜ், பிறப்பு மற்றும் இறப்பு இணை இயக்குநர் டாக்டர் டி.ரவிச்சந்திரன், மாவட்ட தாய்- சேய் நல அலுவலர் டாக்டர் அம்பிகா, ஆலோசகர்கள் டாக்டர்கள் ஆண்டனி, கோபாலகிருஷ்ணன், பரத் ஆகியோர் உடனிருந்தனர்.