தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மஜக சார்பில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களை எதிர்த்து மக்களின் தன்னெழுச்சி அறப்போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள்.
![Thamimun Ansari written letter to CM](http://image.nakkheeran.in/cdn/farfuture/-Ebnj1Bs_sd3RwcNvGy74J3-IQsTh8yaP_75Fo7X0Lw/1577990070/sites/default/files/inline-images/1_5_0.jpg)
தமிழகத்தில் சாதி, மதங்கள், அரசியல் பேதங்களை கடந்து மக்கள் இச்சட்டங்களுக்கு எதிராக போராடி வருவதையும் தாங்கள் அறிவீர்கள். மேற்குவங்கம், பீஹார், ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, போன்ற மாநில அரசுகள் இச்சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என அறிவித்து விட்டன. கேரள அரசு சட்டமன்றத்தை கூட்டி, குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எனவே, அதே வழியில் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, தாங்கள் தமிழக சட்டமன்றத்தில் அத்தகைய தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றுமாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.