விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - புதுச்சேரி சாலையில், பெரும்பாக்கம் கிராம எல்லையில் கடலூரைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கு சொந்தமான தின்னர் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலை உள்ளது. அந்த தொழிற்சாலையில் தினசரி 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (25.04.2021) மதியம் 12 மணி அளவில் 30 பேர் பணியில் இருந்துள்ளனர். அப்போது சுரேஷ் என்ற தொழிலாளி, பாரலில் தின்னர் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அதில் சுரேஷுக்கு உடலில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலம் சுரேஷை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் தொழிற்சாலையில் தீ மளமளவென பரவ தொடங்கியதால் உள்ளே வேலை செய்துகொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தப்பி வெளியே ஓடி வந்து கூச்சலிட்டனர். இதையடுத்து மயிலம் காவல் நிலையத்திற்கும் திண்டிவனம் மற்றும் வானூர் ஆகிய ஊர்களில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் மேலும் கிடுகிடுவென கரும்புகையைக் கக்கியபடியே தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், திண்டிவனம் டிஎஸ்பி கணேசன், கோட்டகுப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் மற்றும் போலீசார் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். தொழிற்சாலை எரிவதை வேடிக்கை பார்க்கத் திரண்டிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்கள். தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். எரிந்துகொண்டிருந்த தொழிற்சாலையில் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட தின்னர் பாரல்கள் அனைத்தும் தீயில் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் மிகப்பெரும் கரும்புகை கிளம்பியது.
அதனால் திண்டிவனம் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, பல மணி நேரம் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் கம்பெனியில் இருந்த டேங்கர் லாரி 250க்கும் மேற்பட்ட பாரல்களில் இருந்த தின்னர் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. நேற்று மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.