வேட்புமனு பரிசீலனை நாளில் வேட்பாளரிலிருந்து காவல்துறையினர் வரை அனைவரும் டென்ஷனாகவே இருப்பார்கள். சிவகாசி மாநகராட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.
சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களை இன்று சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் பரிசீலித்தனர். பரிசீலனை நடைபெறும் இடத்துக்கு வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், திருத்தங்கல் 20-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொன்மாடத்தியின் கணவர் கருப்பசாமி, திருத்தங்கல் நகர திமுக பொறுப்பாளர் உதயசூரியன் உள்ளிட்ட ஆளும்கட்சி நிர்வாகிகள் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் இடத்தை நோக்கி முன்னேறினர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த சிவகாசி டவுண் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் உள்ளிட்ட காவல்துறையினரிடம் உதயசூரியனும் கருப்பசாமியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் சுபக்குமார் ‘வேட்பாளர்களை மட்டுமே அனுமதிப்போம்..’ என்று கூற, வாக்குவாதம் தொடர்ந்தது.
இன்ஸ்பெக்டர் சுபக்குமாரிடம் உதயசூரியன் “நீங்கதான் கையைத் தள்ளிவிட்டீங்கள்ல. உங்ககிட்ட என்ன பேச வேண்டியது இருக்கு? போங்க சார் நீங்க!” என்று குரலை உயர்த்திப் பேச, சுபக்குமாரோ “நான் தள்ளிவிடல..” என்று மறுத்தார். அப்போது கருப்பசாமி ஏதோ சொல்ல, ‘பளார் பளார்’ என்று அவருடைய கன்னத்தில் மாறிமாறி அறைவிட்ட உதயசூரியன், “நான்தான் பேசிட்டு இருக்கேன்ல. நீ ஏன் பேசுற?” என்று எகிறினார். அப்போது கட்சி நிர்வாகிகளில் ஒருவர் “காலைல இருந்து நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு..” என்று அங்கலாய்த்தார். நடந்தை கவனித்த இன்ஸ்பெக்டர் சுபக்குமாரோ, “நீங்க டென்ஷன் ஆகி எங்கள ஏன் டென்ஷன் ஆக்குறீங்க?” என்று புலம்பினார்.
தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள்ள 20-வது வார்டில் போட்டியிடும் பொன்மாடத்தியின் கணவர் கருப்பசாமியை, இன்னொரு சமுதாயத்தவரான உதயசூரியன் அடித்ததால், இச்சம்பவம் சாதி ரீதியான விமர்சனத்துக்கு வழிவகுத்துள்ளது.