தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவி நந்தினியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதே போன்று பல்வேறு அரசியல் தலைவர்களும் மாணவியை அழைத்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர்.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணவேணி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற திருநங்கை மாணவி ஸ்ரேயா 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தார். இவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் இந்த இரு மாணவிகள் மற்றும் இதே போன்று சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று சிறப்பிடம் பெற்ற மாணவிகள் ஆகியோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலில் இவர்களுடன் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மாணவி சப்ரீன் இமானா என்பவருக்கும் ஆளுநருடன் உரையாட அனுமதி கிடைத்திருந்தது. இவர் கடையநல்லூரில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி பயின்று 600க்கு 590 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். மேலும் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றிருந்தார்.
இந்நிலையில் குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் போன்ற மிக முக்கிய அரசு சார்ந்த நிர்வாகிகள் மட்டும் தங்கும் ஆளுநர் மாளிகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தென்காசியில் இருந்து வந்த சப்ரீன் இமானா தனது குடும்பத்தினருடன் தங்குவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்தார். இதனைத் தொடர்ந்து மாணவி சப்ரீன் இமானா குடும்பத்துடன் ஆளுநர் மாளிகையில் தங்கி இருந்தார்.
இதுகுறித்து மாணவி சப்ரீன் இமானா பேசுகையில், “இது எதிர்பாராத விதமாக நடந்த நிகழ்வு. முக்கிய அரசு விருந்தினர்கள் மட்டுமே தங்கும் ஆளுநர் மாளிகையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு அனுமதி அளித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக ஆளுநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.