கரோனா வைரஸ் தொற்று மாதிரியான நெருக்கடி காலங்களில் இணைந்து பணியாற்ற வேண்டிய காவல்துறையினரும், வருவாய் துறையினரும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொண்ட விவகாரம் வழக்காக மாறியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று சந்தேகம் மற்றும் பரிசோதனைக்குட்படுத்த வேண்டிய நபர்களை, ஆய்க்குடி அருகேயுள்ள செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்க வைத்து தனிமைப்படுத்தியுள்ளது தென்காசி மாவட்ட நிர்வாகம். இவர்களை கண்காணிக்கவும், அந்தப் பக்கம் வருகின்ற நபர்களை வாகன பரிசோதனை செய்யவும் மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியனை சேர்ந்த காவலர்களை கொண்டு சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றது எல்லைக்குட்பட்ட ஆய்க்குடி காவல் நிலையம்.
இன்று மணிமுத்தாறு ஒன்பதாவது பட்டாலியனை சேர்ந்த காவலர்கள் முகமது அலி ஜின்னா மற்றும் முத்துக்குமார் என்பவரும் அப்பகுதியினை கண்காணித்து வந்த நிலையில், காலை 11:10 மணியளவில் குற்றாலம் பகுதியினை சேர்ந்த வி.ஏ.ஓ.செந்தூர் பாண்டியன் அவ்வழியாக சென்றிருக்கின்றார். பாதுகாப்பு பணியில் இருந்த இருவரும் அப்பகுதிக்கு வந்த விஏஓ-வினை வழிமறித்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஏஓ-வுக்கும், காவலர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஏஓ-செந்தூர் பாண்டியன் தன்னை தாக்கினார் எனக்கூறி தென்காசி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார் காவலர் முகமது அலி ஜின்னா. தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆய்க்குடி போலீஸார் காயமடைந்த காவலரிடம் புகார் பெற்று, விஏஓ மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. "வந்தவர் விஏஓ எனத் தெரிந்தும் இப்படி செய்திருக்கின்றது காவல்துறை." என கொந்தளித்து வரும் வருவாய் துறையினர் சட்டரீதியாக போராட்டங்களுக்கு தயாராகி வருவதால் மாவட்டத்தில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.