தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் மைனாரிட்டியாகவும், மற்றொரு சமூகத்தினர் பெரும்பான்மையாகவும் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பட்டியலினத்தவர்கள் மீது அடிதடி வழக்கும், மற்றொரு பிரிவினர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஒரு பிரிவினரைச் சேர்ந்த ஒருவருக்கு ராணுவத்தில் வேலை கிடைக்கவே அவர் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி இரு தரப்பினரிடையே சமாதான கூட்டம் நடைபெற்றதாகத் தெரிகிறது. அந்தக் கூட்டத்திலும் பிரச்சனை முற்றுப் பெறவில்லையாம். இந்நிலையில் தீண்டாமை வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்கக் கேட்டுக் கொண்டும் அதற்கு பட்டியலின சமுதாயத்தினர் சம்மதிக்கவில்லையாம். இதனால் கிராமத்தில் பிரச்சனை நீடித்திருக்கிறது.
இதனிடையே பாஞ்சாகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்து வரும் பட்டியலின சமுதாயக் குழந்தைகள் வழக்கம் போல் கிராமத்திலுள்ள மற்றொரு சமுதாயத்தின் நாட்டாமை என்று அழைக்கப்படுகிற மகேஸ்வரன் என்பவரின் கடையில் வழக்கமாக தின்பண்டங்கள் வாங்கச் சென்ற போது அந்தச் சின்னஞ்சிறிய குழந்தைகளிடம் சமுதாய கூட்டத்தில் கட்டுப்பாடு போட்டிருக்கு இனிமேல் உங்களுக்கு கடையில் எந்தப் பொருளும் கொடுக்கமாட்டோம் இதை உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள் என்று தெரிவித்தவர் இதனை வீடியோவாகவும் எடுத்து பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியா பல்வேறு மட்டங்களில் வைரலானதால் கரிவலம் வந்தநல்லூர் போலீசார், விசாரணை நடத்தி வன்கொடுமை சட்டத்தின் கீழ் 5 பேர் மீது வழக்குப் பதிந்தனர். கடையின் உரிமையாளரான மகேஸ்வரன், ராமச்சந்திர மூர்த்தி, இருவரைக் கைது செய்தனர். துணை நாட்டாமையான குமார், சுதா, முருகன் மூவரைத் தீவிரமாகத் தேடியதில் கோவையில் பதுங்கியிருந்த குமாரை நேற்று கைது செய்தனர்.
மேலும் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பொருட்டு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கிராமத்திற்குள் நுழைய போலீஸ் தரப்பில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.