
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா ஆவூர் அருகே உள்ள வில்லாரோடை கிராமத்தை ஒட்டியுள்ள கோரையாற்றில் வெள்ளிக்கிழமை இரவு சிலர் லாரிகளில் மணல் கடத்துவதாக விராலிமலை தாசில்தார் பார்த்திபனுக்கு அப்பகுதியினர் மூலம் தகவல் சென்றது.
இதைத்தொடர்ந்து வருவாய் துறை அலுவலர்களை அழைத்துக்கொண்டு தனது அலுவலக வாகனத்தில் விராலிமலையில் இருந்து கீரனூர் சாலையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பூமரம் குளவாய்பட்டி ஆகிய ஊர்களுக்கு இடையே சென்றபோது வாகனத்தின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர புளியமரத்தில் மோதி விபத்தானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தாசில்தார் பார்த்திபன் உயிரிழந்தார். டிரைவர் உட்பட மூன்று பேர் படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனைக்கு விராலிமலை போலிசார் அனுப்பி வைத்தனர்.
இந்த பகுதியில் தினசரி 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ள நிலையில் பல திருட்டு மணல் லாரிகளுக்கு போலிசாரே பாதுகாப்புக்கு சென்று பிரதான சாலை வரை கொண்டு போய் விடுவதும் வழக்கம். அதனால் தாசில்தார்க்கு நேர்ந்த விபத்திலும் வருவாய் துறையினர் சந்தேகமடைந்துள்ளனர்.