பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மீதான இடமாற்ற நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மீதான பணியிடமாற்ற நடவடிக்கை இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் மீதான மற்ற நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், பணியிட மாற்றம் இன்னும் ரத்து செய்யப்படாததால் அவர்களும், அவர்களின் குடும்பங்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட ஊதிய உயர்வின் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 9 நாட்களுக்குப் பிறகு ஜனவரி 30-ஆம் தேதி போராட்டம் திரும்பப் பெறப்பட்ட நிலையில், விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பள்ளி ஆசிரியர்கள் 1,111 பேரையும், அரசு கல்லூரி ஆசிரியர்கள் 27 பேரையும் இடை நீக்கம் செய்து அரசு ஆணையிட்டது.
ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விடுத்த கோரிக்கையை ஏற்று அவர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டது. எனினும் பெருமளவிலான பள்ளி ஆசிரியர்களும், 15 கல்லூரி ஆசிரியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கின்றனர். பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையினரின் வாழ்க்கை இணையர் வேறு இடத்தில் பணி செய்வதாலும், குழந்தைகள் வேறு இடங்களில் படிப்பதாலும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் வாழும் நிலை உள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், நிதி பற்றாக்குறை காரணமாகவே அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும் அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இத்தகைய நியாயமான காரணங்களுக்காக போராடியவர்களை தண்டிக்கத் தேவையில்லை. அதுமட்டுமின்றி, பா.ம.க. உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று, ஆசிரியர்கள் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையை ரத்து செய்த தமிழக அரசு, அவர்களை பணியிட மாற்றம் செய்தது தேவையற்றது. பணியிடை நீக்கத்தை ரத்து செய்த அதே பெருந்தன்மையுடன், அவர்கள் மீது வேறு எந்த வகையான நடவடிக்கையும் எடுக்காமல் ஏற்கனவே பணி செய்த இடத்திலேயே தொடர அனுமதித்திருக்க வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு நாளையுடன் ஒரு மாதம் நிறைவு பெறவுள்ள நிலையில், அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.
இதுதவிர, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்குதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தமிழக அரசு ஏற்கனவே கூறியிருக்கிறது. தமிழக அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழங்கப்பட்ட 10 அம்சக் கோரிக்கைகளில் இவையும் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.