
குமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள இலப்பவிளை அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தெற்கு புத்தளத்தைச் சேர்ந்த 49 வயதான பொன்ராஜதுரை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், தனது பெற்றோரிடம் ஆசிரியர் பொன்.ராஜதுரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோரும், உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் நேரில் வந்து அவர்களை சமாதானப்படுத்தி ஆசிரியரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் உறவினர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.
கல்வி அதிகாரி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்த வேண்டும், ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்த குளச்சல் உதவி தொடக்க கல்வி அதிகாரி சந்திரமதி, குளச்சல் டி.எஸ்.பி. (பொறுப்பு) வேணுகோபால் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் பெற்றோரை போலீஸ்நிலையத்தில் புகார் செய்யும் படி அறிவுறுத்தினர்.
அதன்படி பெற்றோரும் குளச்சல் போலீஸ் நிலையம் சென்று தங்கள் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பொன்ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து பொன் ராஜதுரை மீது போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் பொன் ராஜதுரை ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் நாகர்கோவில் ஜெயிலில் பொன்ராஜதுரை அடைக்கப்பட்டார்.