பொங்கல் திருநாளை முன்னிட்டு, நாளை (10.01.2025) முதல் 13ஆம் தேதி வரை (13.01.2025) வரை சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாகப் பயணிக்கும் வகையில் நாளை (10.01.2025) முதல் 13 ஆம் தேதி வரை என 4 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் என மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்த மூன்று பேருந்து நிலையங்களுக்கு மற்ற பகுதியில் இருந்து சென்னை மாநகர் பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் இந்த மூன்று பேருந்து நிலையங்களுக்கு எளிதாகச் சென்று வெளி மாவட்ட நீண்ட தூரப் பேருந்துகளைப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 4 நாட்கள் இயக்கப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.