கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழகத்துக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.62 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 44.61 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடியில் இருந்து 1.65 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 67 அடியாக இருந்த நிலையில், நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரே நாளில் 13 அடி உயர்ந்துள்ளது.
இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளை மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மத்திய ஜல்சக்தி அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடுத்த இரு தினங்களுக்கு நாள் ஒன்றுக்கு 10 முதல் 13 டிஎம்சி வரை காவிரி நீர் வர வாய்ப்பு இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடஙக்ளுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.