டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளைச் சந்தித்தப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "தமிழகத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய சுகாதாரத்துறைச் செயலாளரிடம் வலியுறுத்தினேன். தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக அதிகாரிகளிடம் எடுத்துரைத்தேன். ஜூலை 12- ஆம் தேதிக்குள் 15.85 லட்சம் தடுப்பூசி டோஸ் தருவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
தடுப்பூசி உற்பத்தியில் உள்ள சவால்கள், தரச் சான்றிதழ் ஆகியவற்றால் தாமதம் ஆவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவித்தனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த உறுதி அளித்துள்ளனர். காஷ்மீர் உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்காலிக எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினர். கரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை பணிகள் பற்றியும் மத்திய அரசு விளக்கம் தந்தது. 11 மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி பெறுவது குறித்தும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.