புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி வடதெருவில் பழைய ஒ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. அதனைத் தொடர்ந்து, கருக்காக்குறிச்சி மற்றும் கோட்டைக்காடு கிராம விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் போராட்டம் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க மாட்டோம். அதனால் ஒப்பந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்” என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கருக்காக்குறிச்சி வடதெரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் மாநில அரசுக்கு ஆதரவாக இருப்போம். மக்களை வஞ்சிக்கும் திட்டங்களைக் கொண்டுவரும் மத்திய அரசைக் கண்டிப்போம் என்று கீரமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் சங்க தேசியக்குழு உறுப்பினர் மாதவன் தலைமையில் விவசாயிகள் சங்க மா.செ. சோமையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மா.செ. செங்கோடன், ஒ.செ. சொர்ணகுமார், ந.செ. தமிழ்மாறன், ஒன்றிய விவசாய சங்கச் செயலாளர் செல்வராசு ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாதவன் மற்றும் செங்கோடன் கூறும்போது, “தமிழக மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அதைவிடக் கொடிய நோயாக மோடி அரசாங்கம் உள்ளது. தூங்கிக்கொண்டிருப்பவர்களைக் குரங்கு சுரண்டி இழுப்பதுபோல மோடி அரசாங்கம், விவசாயிகளைப் போராட்டத்திற்கு இழுக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எரிவாயு எடுக்கக் கூடாது என்றபோது கூட மத்திய அரசின் டெண்டர் அறிவிப்பு வேதனை அளிக்கிறது. ஆனால், தமிழக அரசு மக்கள் பக்கம் நிற்பதை வரவேற்கிறோம். தொடர்ந்து மாநில அரசுக்கு ஆதரவாக நிற்போம். 17ஆம் தேதி பிரதமரைச் சந்திக்கும் தமிழக முதல்வரிடம்.. இனி ஒருபோதும் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்ற நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும்” என்றனர்.