Skip to main content

எழுத்தாளர் பாமாவிற்கு விருது வழங்கி சிறப்பிப்பு!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Writer Bama was honored with an award

பெண்களுக்காகக் கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிருவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாகத் தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஔவையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8 ஆம் தேதி) இந்த விருது வழங்கப்படும். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

அந்த வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை இலக்கியத்தின் மூலமாகத் தலித் மக்களின் குரலாக ஒலித்து சமூகத் தொண்டாற்றி வரும் முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் 7 ஆம் தேதி (07.03.2024) அறிவித்திருந்தது. 

Writer Bama was honored with an award

எழுத்தாளர் பாமா, பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையைத் தனது வாழ்வனுபவங்களின் மூலம் அதன் தகிக்கும் அனலோடு தமிழிலக்கிய படைப்புகளாகவும், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளார். இவரது நூல்களான கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய ‘கருக்கு’ என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டின் 'கிராஸ் வேர்ட் புக்' விருதைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் எழுத்தாளர் பாமாவின் இலக்கியப் பணியினை பாராட்டி ஒளவையார் விருதை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (11.06.2024) வழங்கி சிறப்பித்தார். முன்னதாக எழுத்தாளர் பாமாவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், “சாதி, மதம், பாலினம், இனம் எனப் பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசும் 'கருக்கு' எனும் தன்வரலாற்றுப் புதினத்தின் வழியாக உலக அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ் தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ஔவையார் விருதைப் பெறுகிறார். மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்து நடையால் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றி, இந்த விருதுக்குத் தேர்வாகி இருக்கும் அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!” எனத் தெரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அமுதா ஐ.ஏ.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பு!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Additional responsibility for Amutha IAS

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கடந்த 16 ஆம் தேதி  (16.07.2024) உத்தரவிட்டிருந்தார். இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டிருந்த உத்தரவில், ‘தமிழக உள்துறை செயலாளர் அமுதா பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிட்கோ நிர்வாக இயக்குநராக இருந்த மதுமதி பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.  அதோடு 10 மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதன்மூலம் உள்துறை செயலாளராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ் வருவாய்த்துறை செயலாளராக மாற்றப்பட்டார். இந்நிலையில் வருவாய்த்துறை செயலாளராக உள்ள அமுதாவுக்கு முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசு முதன்மைச் செயலர் அமுதா, ஐ.ஏ.எஸ்., முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரி பதவியின் முழு கூடுதல் பொறுப்பை கவனிப்பார். மேலும் அவர் மக்களுடன் முதல்வர் மற்றும் பிற மக்கள் குறை தீர்க்கும் துறைகளுக்கு சிறப்பு அதிகாரியாக செயல்படுவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

‘அம்மா உணவகங்கள் மேம்படுத்தப்படும்’ - ஆய்வுக்கு பின் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
CM MK Stalin order for Amma mess will be improved

பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும், 7 அரசு மருத்துவமனைகளிலும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட 388 அம்மா உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை எளியோருக்கு பயனளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகின்றது. மேலும் அம்மா உணவகங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சத்து ஐயாயிரம் பயனாளிகள் உணவு அருந்தும் நிலையில், ஒரு ஆண்டில் சுமார் நான்கு கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா உணவங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை ஆகியவை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், மளிகை பொருட்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு உருளைகள் போன்றவை திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தயிர் ஆவின் நிறுவனத்திடம் பெறப்படுகிறது. இந்த உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த மூன்றாண்டுகளில் 148.4 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

CM MK Stalin order for Amma mess will be improved

இவ்வாறு பல்வேறு செலவினங்களுக்கும் 2021 மே மாதம் முதல் இதுவரை வரை சென்னை மாநகராட்சியால் சுமார் 400 கோடி ரூபாயும், அரிசி மற்றும் கோதுமைக்கான தமிழ்நாடு அரசின் மானியமாக 69 கோடி ரூபாயும் என, மொத்தமாக 469 கோடி ரூபாய் அரசு வழிவகுத்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி 122ஆவது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அம்மா உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை சோதனை செய்தார். அதோடு அங்கு உணவருந்த வந்த பயனாளிகளோடும் உரையாடினார். இதனையடுத்து பல்வேறு அம்மா உணவகங்களில் உள்ள பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவற்றை மாற்றி புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை 7 கோடி ரூபாய் செலவில் வழங்கிட ஆணையிட்டார். மேலும், 14 கோடி ரூபாய் செலவில் இந்த உணவகங்களை புனரமைத்திடவும் ஆணையிட்டுள்ளார். தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.