இளம் வழக்கறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 3,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 9 இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர்களாக தங்களை நிலை நிறுத்த நான்கு ஆண்டுகள் வரை தேவைப்படுவதால் தமிழக அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகையை வழங்குகிறது. மேலும், அரசு சட்டக்கலூரிகளில் படித்த 30 வயதுக்குள் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே உதவித்தொகை தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.