மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீடு தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (25/10/2020) சந்திக்கிறார்.
பிற்பகல் 03.15 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்லும் முதல்வர் ஆளுநரை சந்தித்து, 7.5% உள் இடஒதுக்கீட்டுக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வருடன் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்டோரும் ராஜ்பவனுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு மசோதா நிறைவேற்றியது. தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தராத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆளுநரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தினர். இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.