திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை, வேல் யாத்திரை நடத்த இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.
வேல் யாத்திரைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி முன் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், விஜய் நாராயண் தமிழக கரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால், நாளை தொடங்க உள்ள பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் பா.ஜ.க. நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகிகள் 6 பேரை இரவோடு இரவாக காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் விழுப்புரம் மாவட்டத்தின் பா.ஜ.க. பொதுச் செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் ராஜ்குமார், பாஸ்கரய்யா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், பா.ஜ.க.வின் வேல் யாத்திரையை தடுக்க திருத்தணியில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தணி கோயில் முன் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் முக்கிய சந்திப்பில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருத்தணிக்கு வரும் பா.ஜ.க.வினரை கைது செய்வதற்காக 20 பேருந்துகளை போலீசார் தயார் நிலையில் வைத்துள்ளனர்.