தமிழ்நாடு முழுவதும் 24 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் / உதவி ஆணையர்கள் (டிஎஸ்பி / ஏசி) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தலின்போது ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்கள், சொந்த மாவட்டத்தில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வெளியான இரு மாதங்களுக்குப் பிறகு, காவல்துறையில் மீண்டும் பெரிய அளவில் இடமாற்றங்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், செப். 20ம் தேதி மாலையில், தமிழகம் முழுவதும் 24 டிஎஸ்பிக்களை திடீரென்று இடமாற்றம் செய்து, டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாநகர குற்ற ஆவணக்காப்பக உதவி ஆணையராக பணியாற்றி வரும் ராஜகாளீஸ்வரன், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சரக கியூ பிரிவு டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றி வந்த டிஎஸ்பி பொன்னம்பலம், கடலூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப்பிரிவில், ஏற்கனவே காலியாக இருந்த பணியிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வரும் ரவிச்சந்திரன், தர்மபுரி மாவட்ட கியூ பிரிவு டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த இடம் காலியாக இருந்தது. விழுப்புரம் உள்கோட்ட டிஎஸ்பியாக பணியாற்றி வரும் வி.வி.திருமால், திடீரென்று சென்னை தலைமை இடத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த இடமாறுதல் உத்தரவில் பெண் டிஎஸ்பிக்கள் ஒருவரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.