உயர்நீதிமன்றம் சேலம் எட்டுவழி சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டதை தொடர்ந்து சேலம் பகுதி விவாசயிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தத் தடைவிதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.
சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிராகப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மக்களின் ஒப்புதலின்றி நிலம் கையகப்படுத்துதல் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வலியுறுத்தி வந்தது.
திருவண்ணாமலையிலும் சேலத்திலும் பல்லாயிரக்கணக்கானவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. அரசியல் கட்சிகள் யாவும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும்கூட தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் பணியைச் செய்து வந்தது. அதற்கு இப்போது சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.
தமிழக அரசு இந்தத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது போல் ஏற்கனேவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் விவசாயிகள் வேளாண்பணிகளைச் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் எனக்கூறியுள்ளார்.