Skip to main content

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழக அரசு!

Published on 18/10/2024 | Edited on 18/10/2024
Tamil Nadu Government has increased the dearness allowance of Tamil Nadu government employees

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை மத்திய அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலம், சுமார் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டது. 

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தப்படவுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த வகையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.07.2021 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில், இதனை பரிசீலித்து 01.07.2024 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளேன். இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.1931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள். ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்’ என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்