Skip to main content

கேரளாவுக்கு எதிராக தமிழக  விவசாயிகள் முற்றுகை போராட்டம்! தடுத்து நிறுத்திய போலீசாரிடம் வாக்குவாதம்!! 

Published on 01/11/2021 | Edited on 01/11/2021

 

Tamil Nadu farmers blockade struggle against Kerala

 

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள மாநில எல்லையான குமுளியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் லோயர் கேம்ப்-ல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். உத்தமபாளையம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட அளவான 142அடியை உயர்த்தவிடாமலும், கேரள அமைச்சர்கள்,  இடுக்கி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்ட சம்பவம் தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பொதுவெளியிலும் சர்ச்சையை கிளப்பியது.

 

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இதுகுறித்து நிலையான வழிகாட்டுதலின்படி கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. மதகுகள் திறக்கப்படும்போது கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சரும் மற்றும் சில அதிகாரிகளும் உடனிருந்து பார்வையிட்டார்கள். உண்மை நிலை இவ்வாறு இருக்க, ஏதோ கேரள அரசின் அதிகாரிகள்தான் அணை மதகுகளைத் திறந்தார்கள் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருப்பது மிகத் தவறானது என்று குறிப்பிட்டிருந்தார். கேரளாவின் இந்தப் போக்கினை கண்டித்து  ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தமிழக - கேரள மாநில எல்லையான குமுளியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

 

Tamil Nadu farmers blockade struggle against Kerala

 

இதற்காக  வாகனங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேனி மாவட்டம் கூடலூர் வழியாக எல்லையை  நோக்கி வந்தனர். அவர்களை உத்தமபாளையம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான காவல்துறையினர் லோயர் கேம்ப  பகுதியில் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருடன், விவசாயிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் உத்தமபாளையம் வட்டாட்சியர் அர்ஜூனனிடம் முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்டு வருவதற்கு அனுமதி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

அதன் பின்னர் கேரள அரசைக் கண்டித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறான கருத்துக்களைத் தெரிவித்து வரும் அம்மாநில ஆளுநர் மற்றும் அரசை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும், முல்லைப் பெரியாறு அணையில் அடிக்கடி ஆய்வு செய்து வரும் அம்மாநில அமைச்சர்களைக் கண்டித்தும் கோசங்களை எழுப்பினர். மேலும் முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டி  நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோசங்களையும் எழுப்பினர்.

 

Tamil Nadu farmers blockade struggle against Kerala

 

அதன் பின் ஐந்து மாவட்ட முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகளின் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, “முல்லைப் பெரியாறு அணையில் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தேனியில் இருந்து முல்லைப் பெரியாறு அணை நோக்கி  ஐந்து மாவட்ட விவசாயிகள் நீதி கேட்டு நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். இதற்காக தேனி உட்பட ஐந்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 5,000 விவசாயிகள் பங்கேற்க இருக்கிறார்கள்” என்று கூறினார். பேட்டியின்போது ஐந்து மாவட்ட விவசாயச் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.தேவர் மற்றும் பொதுச் செயலாளர் பொன்காசி கண்ணன் உள்பட விவசாயச் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்