'தமிழ்நாடு நாள் இன்று' கொண்டாடப்பட்டு வருகிறது. 1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது. அப்பொழுது சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என சூட்டக்கோரி தியாகி சங்கரலிங்கனார் தொடர்ந்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்தார். மா.பொ.சி, ஜீவா உள்ளிட்ட ஏராளமானோர் தமிழ்நாடு கோரிக்கைக்காக குரல் கொடுத்தனர். பலவித போராட்டங்களுக்குப் பின், அண்ணா முதல்வரான பிறகு 1967 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்தார். தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 தேதியே 'தமிழ்நாடு தினம்' என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் நவம்பர் ஒன்றுதான் தமிழ்நாடு நாள் என சில அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்திருந்தன. தமிழக முதல்வர் அறிவிப்பின் படி ஜூலை 18 இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்காக சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சிறப்பை போற்றும் வகையில் கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.