கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மலைகளை உடைத்து குண்டுக்கல், எம்சாண்ட் உட்பட பாறையிலிருந்து எடுக்கக்கூடிய பல்வேறு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் இதற்கு இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடந்து முடிந்த தேர்தலின் பொழுது இந்த பகுதியில் இருந்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளித்தன.
ஆனால் சில நாட்களாக 600 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளை என்பது தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே உள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடராக மக்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துவரும் நிலையில் முதல் முறையாக இந்த விவகாரம் தொடர்பாக ஒரு அரசியல் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு திரண்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கனிமவள கொள்ளையால் மலை வளம் அழிந்து வருவதாகவும், இதனை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்.