தமிழ்நாட்டில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என 9 மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டில் உள்ளாட்சி பதவிகள் காலியாகவுள்ள இடங்களிலும் கடந்த 6ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவுற்றபோது அதனை செய்தியாகப் பதிவு செய்ய தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மும்முரமாக இருந்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த ராமாலை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பெட்டிகளுக்கு சீல் வைக்கும் நிகழ்வை படம்பிடிக்க தொலைக்காட்சி செய்தியாளர்கள் சென்றிருந்தனர். அந்தவகையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், தனது ஒளிப்பதிவாளருடன் இணைந்து அதனை பதிவுசெய்துகொண்டிருந்தபோது, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவரின் முகவர் உட்பட 3 முகவர்கள் செய்தியாளரையும், ஒளிப்பதிவாளரையும் தாக்கினர்.
இதுகுறித்து தாக்கப்பட்ட செய்தியாளரின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முழுவதும் பத்திரிகையாளர் சங்கங்கள் அரசுக்கும், காவல்துறைக்கும் வேண்டுகோள் விடுத்தன.
இந்நிலையில், அக்டோபர் 8ஆம் தேதி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர்கள் இணைந்து செய்தியாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதேவேளையில், மாவட்ட நிர்வாகம், தாக்கியவர்களில் ஒருவரை கைது செய்துவிட்டோம். மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஆனால், தாக்கிய மற்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியனிடம் செய்தியாளர்கள் வழங்கினர். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.