திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய், ஷார்ஜா சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இந்த திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி மற்றும் தங்கம் மாற்றும் இடைத்தரகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார்களை முன்வைத்துவந்தனர்.
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் வெளிநாட்டு கரன்சிகளுடன் வருவதால் இந்திய பணம் கையில் இல்லாததை அறிந்துகொண்டு இடைத்தரகர்கள் அவர்களிடம் கமிஷன் அடிப்படையில் டாலர்களை மாற்றித் தருவார்கள். அதேபோல் சிங்கப்பூர், மலேசியா, ஷார்ஜா, துபாய் விமானங்களில் வரும் பயணிகளிடம் அங்கிருக்கும் புரோக்கர்கள் தங்க நகைகளைக் கொடுத்து அனுப்புவார்கள்.
தங்களது நகை எனக் கூறி எடுத்துவரும் பயணிகள், திருச்சி விமான நிலைய வாசலில் இருக்கும் இடைத்தரகர்களிடம் கொடுத்து கமிஷன் வாங்கிக்கொள்வார்கள். இவ்வாறு சுமார் 30 இடைத்தரகர்கள் திருச்சி விமான நிலையத்தில் சுற்றிவருவது வழக்கமாக இருந்துவருகிறது. இவர்களுக்கு அங்கிருக்கும் சில டிரைவர்களும் உடந்தை எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு திருச்சி விமான நிலையத்தில் புரோக்கர்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக விமான நிலைய இயக்குநர் தர்மராஜ் திருச்சி ஏர்போர்ட் போலீசில் கூறியிருந்தார். ஆனால், அந்தப் புகார் குறித்து பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. இந்த நிலையில், இன்று (16.11.2021) காலை சுமார் 9 மணியளவில் விமான நிலையம் வந்த விமான நிலைய இயக்குநர் தர்மராஜ், காரில் இருந்து இறங்கி நேரடியாக இடைத்தரகர்களைப் பிடிக்க ஆரம்பித்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத இடைத்தரகர்கள் ஓட்டம் பிடித்தனர். விடாமல் விரட்டிய விமான நிலைய இயக்குநர் தர்மாஜ், 2 புரோக்கர்களைப் பிடித்து ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தார். விமான நிலையத்தில் இருந்த இடைத்தரகர்களை விமான நிலைய இயக்குநரே விரட்டிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.