கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிப்காட் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது லாரியின் வேகத்தை டிரைவர் திடீரென குறைத்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் திண்டுக்கல்லில் இருந்து சென்னையை நோக்கி லாரிக்கு பின்னால் வந்த கார் லாரியின் பின்பக்கம் மோதியுள்ளது. இந்த சூழலில் திருச்சியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து காரின் மீது மோதியது.
இதனால் விபத்தில் சிக்கிய பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்து சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இவர்கள் இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இடைக்கல் போலீசார் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லாரி மீது கார் மற்றும் பேருந்து அடுத்தடுத்து மோதிய விபத்தில் தாய் மற்றும் மகன் என 2 பேர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.