சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தமிழகத்தில் மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைப் போலவே, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 55 நாட்களாக தொடர்ந்து அறவழியில் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், மாணவர்களின் கல்விக் கட்டணம் குறித்து இதுவரை தமிழக அரசு அரசாணை வெளியிடவில்லை. இந்த நிலையில், திங்கள்கிழமை அரசாணை வெளியிடுவதாக மாணவர்கள் மத்தியில் உறுதி கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அறவழிப் போராட்டத்தை காத்திருப்புப் போராட்டமாக நடத்திவந்தனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை தமிழக அரசு மாணவர்களின் கல்விக் கட்டணம் குறித்து அரசாணை வெளியிடுவதில் தாமதம் ஆகிறது என்று கூறப்படுவதால், இன்று மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்று கோரிக்கையை வலியுறுத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதேநேரத்தில், பிப்ரவரி 2ஆம் தேதி சட்டசபை கூட உள்ள நிலையில் இது குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப உள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு அரசாணை வெளியிட வேண்டும் எனவும் மாணவர்கள் கூறுகின்றனர். அரசாணையை கண்ணில் காண்பித்தால் போதும் நாங்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என மாணவர்கள் மத்தியில் கூறப்படுகிறது.