Skip to main content

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாயமான மாணவன் மீட்பு... பெற்றோருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது! 

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

 student recovery for fear of failing NEET exam; The heartbreaking letter written to the parents got stuck!

 

நீட் தேர்வில் தோல்வி ஏற்படும் என்ற பயத்தால் வீட்டைவிட்டு ஓடிய மாணவனை ரயில்வே காவல்துறையினர் மீட்டனர். பெற்றோருக்கு மாணவன் எழுதி வைத்த உருக்கமான கடிதமும் சிக்கியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னைக்கு சேலம் வழியாக தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் (22.09.2021) இரவு சேலம் வழியாக சென்ற அந்த ரயிலில், சேலம் ரயில்வே காவல் நிலைய தலைமைக் காவலர் விஜயகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

 

ஜோலார்பேட்டை வரை அவருக்கு அந்த ரயிலில் இரவு ரோந்து பணி ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு பெட்டியில் சுமார் 18 வயதுள்ள சிறுவன், தனியாக நின்றிருந்தான். பள்ளி மாணவன் போல தோற்றமளித்ததால், சந்தேகத்தின் பேரில் அவனிடம் தலைமைக் காவலர் விசாரித்தார். விசாரணையில் அந்த சிறுவன், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகரைச் சேர்ந்த மாதன் - அம்பிகாவதி தம்பதியின் மகன் விக்னேஷ் (18) என்பது தெரியவந்தது. மாதன், நீலகிரி மாவட்டம் கெந்தரை அரசு நிடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார். செப். 12ஆம் தேதி நடந்த நீட் தேர்வை சரியாக எழுதாததால், தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில், பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்திருப்பதும் தெரியவந்தது.  

 

 student recovery for fear of failing NEET exam; The heartbreaking letter written to the parents got stuck!

 

மாணவன் விக்னேஷை மீட்ட காவலர் விஜயகுமார், ஜோலார்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்றார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பெற்றோர் தரப்பில், மகன் காணாமல் போனது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளதாவும், வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து கடிதம் எழுதி வைத்திருக்கிறான் என்றும், மகனை அழைத்துச் செல்ல காவல் நிலையம் வருகிறோம் என்றும் கூறியுள்ளனர். இதற்கிடையே விக்னேஷ் எழுதி வைத்த கடிதத்தையும் காவல்துறையினர் சேகரித்தனர். அந்தக் கடிதத்தில் விக்னேஷ், “அன்புள்ள அப்பா, அம்மா... நீங்கள் எதிர்பார்த்ததை என்னால் கொடுக்க இயலாது. இந்த முறையும் நீட் தேர்வில், ஏமாற்றம்தான்.

 

உண்மையைக் கூற எனக்குப் பயமாக இருந்தது. இதற்கு மேலும், உங்களை அப்பா, அம்மா என்று அழைப்பதற்கும், இந்த வீட்டில் இருப்பதற்கும் எனக்குத் தகுதியில்லை. சரியா? தவறா? என்று தெரியவில்லை. வீட்டை விட்டு வெளியே செல்ல முடிவு செய்துள்ளேன். இன்று நான் எனது வெற்றிப்பாதையை நோக்கி வெகுதூரம் செல்கிறேன். என்னைத் தேட வேண்டாம். இன்னும் சில வருடங்களில் நான் திரும்பி வருவேன். வெற்றி பெற்றவனாக... இது சத்தியம்” என எழுதி வைத்திருப்பதும் தெரியவந்தது. மாணவனின் பெற்றோர், வியாழக்கிழமை (செப். 23) காலையில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையம் சென்றனர். விக்னேஷுக்கு புத்திமதி கூறிய காவல்துறையினர், அவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிய பெற்றோர், மகனை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்