Skip to main content

கோவை பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் திட்டியதால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

Published on 17/07/2018 | Edited on 17/07/2018
STU


கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர் திட்டியதால் சஞ்சய் பிரசாத் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குழி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது 18 வயது மகன் சஞ்சய் பிரசாத் கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு உற்பத்தி துறை படித்து வந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை வகுப்பில் சஞ்சய் பிரசாத்திற்கும், மற்றொரு மாணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதைபார்த்த கணினித்துறை பகுதி நேர ஆசிரியர் முருகன் இருவரையும் கண்டித்துள்ளார். மேலும் இருவரையும் திட்டியதோடு, பெற்றோரை அழைத்து வந்தால் மட்டுமே வகுப்பிற்குள் அனுமதி அளிக்கப்படுமென முருகன் கூறியுள்ளார். பெற்றோரை அழைத்து வர பயந்த சஞ்சய் பிரசாத்தினை கடந்த வாரம் முழுவதும் வகுப்பிற்குள் விடவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 16 ம் தேதி திருப்பூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டு சஞ்சய் பிரசாத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவர் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் முருகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் வைரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து கல்லூரிக்கு ஒரு நாள் விடுமுறை அளித்து முதல்வர் வைரம் உத்தரவிட்டார். மாணவர் சஞ்சய் பிரசாத் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் முருகன் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க கூடாது என உத்தரவிட்டுள்ளோம் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம் எனவும் கல்லூரி முதல்வர் வைரம் தெரிவித்தார்.

இதற்கிடையில், கல்லூரி நிர்வாகம் தரப்பிலிருந்து இந்திய மாணவர் சங்கத்தினர் தினேஷ், மனோஜ் ஆகிய இருவர் மீது மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்