சென்னையில் சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பண்டல் பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையில் சென்னையில் பல இடங்களில் எலக்ட்ரானிக் சிகரெட் இயந்திரம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவை பறிமுதல் செய்யப்பட்டது.
1300 எலக்ட்ரானிக் சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். பிடிக்கப்பட்ட எலக்ட்ரானிக் சிகரெட்களின் விலை ரூ.3000 முதல் 5 ஆயிரம் வரை இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று தொடர்ச்சியாக தனிப்படைகள், கடைகளில் சோதனை செய்வார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை ஆடியப்ப தெருவில் குடோன் ஒன்றில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குடோனில் காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 28 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பண்டல் பண்டலாக அடுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த யானைக்கவுனி போலீசார், குடோன் ஊழியர்கள் இரண்டு பேரை இது தொடர்பாக கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இந்த வெளிநாட்டு சிகரெட் கடத்தல் தொடர்பாக சாந்தி லால் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.