வேலூர் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் ஜனவரி 28 ஆம் தேதி ஹோட்டல் மவுண்ட் பேரடைஸில் நடந்தது. அதில் கலந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசும்போது, “காவிரி நதி - கோதாவரி நதி இரண்டையும் இணைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை போராட்டம் நடத்தியது. ஆனால் மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல் பாலாற்றில் மழைக்காலங்களில் வரும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்று நாங்கள் ஐந்து முறை போராட்டம் நடத்தியும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் ஆந்திரா அரசு அங்கங்கே தடுப்பணை கட்டி நமக்கு வரும் தண்ணீரை பாலாற்றில் தடுத்துவிட்டது. இது சம்பந்தமாக எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வன்னியர்களுக்கு 20 சதவீத உள்ஒதுக்கீடு வேண்டுமென்று தமிழகத்திலுள்ள 36 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் எதிரே ஜனவரி 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் கட்சி வேறுபாடின்றி எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும்,” என்றார்.