
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திருவாரூர் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திங்கள் கிழமை சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு, திருச்சி செல்லும் வழியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழமையான குடவரை ஓவியங்களை காண சித்தன்னவாசல் வருவதாக பயணப் பட்டியல் வெளியாகி உள்ளது.
ஆளுநர் சித்தன்னவாசல் வரும் தகவல் பரவியதால் சிபிஎம், விசிக உள்ளிட்ட பல அரசியல் கட்சியினர் ஆளுநர் சித்தன்னவாசல் வந்தால் கருப்புக் கொடி காட்டி வரவேற்போம் என்று எதிர்ப்பை அறிவிப்பாக வெளியிட்டதுள்ளதுடன், தொடர்ந்து காரைக்குடியில் இருந்து சித்தன்னவாசல் செல்லும் பிரிவு சாலையில் கட்டியாவயல் பகுதியில் திரண்டு கருப்புக் கொடி காட்ட அழைப்பு கொடுத்துள்ளனர்.
இந்த அறிவிப்புகளையடுத்து ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அத்தனை போலீசாரையும் அனுப்பியுள்ள நிலையில் திங்கள் கிழமை சித்தன்னவாசல் வரும் ஆளுநருக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எஞ்சியுள்ள போலீசாரையும் அனுப்பிவருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஒன்றிரண்டு போலிசாரே உள்ளனர்.
கட்டியாவயலில் கருப்புக்கொடி காட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னதாக கைது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதால் திடீர் என கருப்புக் கொடி காட்ட மாற்று இடங்களையும் தேர்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கருப்புக் கொடி காட்டினால் கேரளாவைப் போல தமிழ்நாடு ஆளுநரும் கருப்புக்கொடி காட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல மாநில ஆளுநர்கள் எங்கே சென்றாலும் எதிர்ப்புகள் வலுத்து வருவது அதிகரித்துள்ளது.