ஏழை, எளிய சாதாரணப் பட்ட மக்கள் சளி, காய்ச்சலாக இருந்தாலும் தீவிர அறுவை சிகிச்சை என்றாலும் நேராகச் செல்வது அரசு மருத்துவமனைக்கு தான். அப்படி இன்று தமிழகம் முழுக்க உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்ற பொது மக்களுக்கு போராட்டம் நடத்திக் கொண்டிருந்த டாக்டர்களைத் தான் பார்க்க முடிந்தது.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் பிரபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட டாக்டர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து டாக்டர் ரவிச்சந்திர பிரபு கூறும்போது, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தியும் பதவி் உயர்வு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி முதல் 29- ந்தேதி வரை தமிழகம் முழுக்க தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அடுத்ததாக வருகிற 29ஆம் தேதி முதல் தொடர்ந்து 48 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். ஆனால் அவசர சிகிச்சை பிரி்வு எப்போதும் போல் செயல்படும் " என்றார்.