தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சுற்றுப்புறச் சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் பெரும் கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் பலவீனமான அரசாணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயமும், உச்சநீதிமன்றமும் நிராகரித்துள்ள நிலையில், ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து வருகின்றது.
இந்த சூழலிலும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையான ஆலையை நிரந்தரமாக மூடும் கொள்கை தீர்மானத்தை நிறைவேற்றாமல், ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்காது என்று சொல்லிவருகின்றது. அதேவேளையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசினாலே கைது என்கிற சூழலையும் காவல்துறை ஏற்படுத்தி வருகின்றது. சமூக செயல்பாட்டாளர் சந்தோஷ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸாரின் இந்த அடக்குமுறையை கண்டித்து பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஹரிராகவன், மைக்கேல் தனிஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதையும், துண்டுபிரசுரம் வழங்குவதையும், நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிடுவதையும் அனுமதிக்கும் தமிழக அரசு, சுற்றுப்புறச் சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் பெரும் கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாய் திறந்தாலே கைது நடவடிக்கையை மேற்கொள்வது என்பது கண்டிக்கத்தக்கது.
சுற்றுச்சூழல் பாதிப்பை காரணம் காட்டி தமிழக அரசால் அரசாணை மூலம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது, அதில் அரசு உறுதியாக உள்ளது என தமிழக அரசு கூறிவரும் நிலையில், ஆலைக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளதாகவும், லட்சக்கணக்கானோர் ஆலையை திறக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார். இது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கையில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
ஆகவே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அதோடு தூத்துக்குடியில் காவல்துறை மூலம் மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கையை நிறுத்துவதோடு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.