ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கு கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜாவும், திமுக சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோரும் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் சரோஜா, தி.மு.க வேட்பாளர் துரைச்சாமியை விட 9,631 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து, தோல்வியடைந்த திமுக வேட்பாளர் வி.பி.துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில், பணப்பட்டுவாடா மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து தேர்தலில் டாக்டர். சரோஜா பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு மீது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜனவரி 22- ஆம் தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன், மனுதரார் கூறிய குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. எனவே, ராசிபுரம் சட்டமன்ற தேர்தலில் டாக்டர். சரோஜா பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.