Skip to main content

மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்...

Published on 15/09/2020 | Edited on 15/09/2020
State Human Rights Commission issues notice

 

 

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழைநீர் தேங்கி இருந்த நேரத்தில் சாலையோரமாக செல்ல முயன்ற பொழுது புதைக்கப்பட்ட மின்கம்பியை மிதித்ததில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த வயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து அலிமா என்ற இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என கேள்விகள் எழுந்துவந்த நிலையில், தங்களுக்கு சம்பந்தமில்லை என  தெரிவித்திருந்த மின்சார வாரியம், மாநகராட்சியின் தெருவிளக்கு மின்கம்பியை மிதித்தவர் தான் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகவும், மின் இணைப்பு பெட்டி வரை மின்சாரத்தை வினியோகம் செய்வது தான் தங்கள் பணி விளக்கம் அளித்திருந்தது.

 

அதேபோல் பெண் இறந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில்  விளக்கமளித்தது. இதேபோல் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வயலில் மின் வயர் அறுந்து விழுந்த நிலையில், தெரியாமல் அதை மிதித்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டுக்கு அருகே செல்லும் மின் வயர் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதை அறியாத பேச்சியம்மாள் அவ்வழியாக சென்றபோது அறுந்து விழுந்து கிடந்த வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

அந்த மின்சார வயர் ஏற்கனவே பலமுறை தாழ்வாக இருந்ததாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

ஒரே நாளில் இருவர் அலட்சியம் காரணமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் சென்னை புளியந்தோப்பில் இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக இரண்டு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மாநில மனித உரிமைகள் ஆணையம் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரிய தலைவர் ஆகியோர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்